Breaking News

அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை..

 


புதுவை மாநிலத்தில் பள்ளி,கல்லூரி சேர்க்கை,அரசு பணி,கல்வி உதவித்தொகை,உட்பட பல்வேறு தேவைகளுக்கு தாலுகா அலுவலகங்களில் பல்வேறு சான்றிதழ்கள் வழங்கபட்டு வருகின்றது.இதில் ஆண்டுதோறும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு அரசின் பொது தேர்வுகள் முடிந்த பின்னர் சாதி,மற்றும் இருப்பிட , குடியிருப்பு குடியுரிமை சான்று பெறுவதற்கு மாணவர்களும் பெற்றோர்களும் சொல்ல முடியாத அவலங்களை சந்திக்கும் நிலை ஒவ்வொரு ஆண்டும் நிலவுகிறது.

புதுவை மாநிலத்தை பொறுத்தவரையில் 2001 ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் 1964 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அடிப்படையாக கொண்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 2001 ஆம் ஆண்டு மற்றும் 1964 ஆண்டு ஆவணங்களை சமர்பித்து உடனடியாக சான்றிதழ்கள் வழங்க படுகிறதா என்றால் அது இல்லை.

மாணவ,மாணவிகள் பல முறை சென்று போதிய ஆவணங்கள் வழங்கினாலும் கால தாமதமாகவே சான்றிதழ்கள் வழங்கும் நிலைதான் புதுச்சேரி தாலுகா அலுவலகங்களில் நிலவுகிறது.இதை விட மிக பெரிய கொடுமையாக கஷ்டபட்டு நல்ல மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகள் சிலர் ஒரு சில ஆவணங்கள் இல்லாமல் சாதி மற்றும் குடியிருப்பு சான்றிதழ்கள் பெற முடியாமல் தங்கள் படிப்பை தொடர முடியாத நிலை உண்டாகிறது.

கடந்த பல வருடங்களாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாணவர்கள் அலை மோதி தங்களின் படிப்பை பதிவு செய்யும் முறை இருந்து வந்தது. நான் உட்பட பல்வேறு தரப்புகள் கேட்டு கொண்டதற்கு இணங்க குறிப்பாக நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது பலமுறை இது குறித்து பேசியதன் விளைவாக தற்போது அந்தந்த பள்ளிகளிலேயே சிறப்பு பதிவு பதிவு முகாம் நடைபெறுகிறது.

இதனால் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை இல்லாமல் மாணவர்களுக்கு மிகப்பெரிய சிரமம் நீங்கி மகிழ்ச்சியுடன் பதிவு செய்து கொள்கின்றனர். 

இதையே முன் உதாரணமாக வைத்து மாணவ,மாணவிகள் சிரமமின்றி தங்களின் ஜாதி மற்றும் குடியிருப்பு,இருப்பிட சான்றிதழ்கள் பெற்றிட அந்தந்த பள்ளிகளிலேயே வருவாய் துறை மூலம் சிறப்பு முகாம்கள் அமைத்து சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை மக்கள் சார்பில் கேட்டு கொள்கிறோம்.இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் எந்த வித பதட்டம் இல்லாமல் தங்களின் ஆவணங்களை சமர்பித்து சான்றிதழ்கள் பெற முடியும்..மேலும் மாணவர்கள் இல்லம் அருகே பள்ளிகளில் வழங்கப்படுவதால் தேவையான ஆவணங்களை ஆசிரியர்கள் மூலம் பெற்றோர்களிடம் கேட்கும்போது தேவை இல்லாத சர்ச்சைகள் வராமல் இருக்கும்.பள்ளி அலுவலர்களும் முகாமில் கலந்து கொள்வதால் இரு துறைகளும் இணைந்து பணியாற்ற வாய்ப்பாக அமையும்...

கடந்த ஆண்டு சான்றிதழ்கள் வழங்க அரசு நடத்திய சிறப்பு முகாம்கள் மாணவ,மாணவிகளுக்கு உரிய பலன்களை அளிக்கவில்லை. மாணவ, மாணவிகளிடம், தேவையான ஆவணங்களை பெற்றுக் கொண்டு அலுவலகத்திற்கு வரவைத்து அலை கழிக்கும் நிலையே ஏற்பட்டது.

இது போன்ற நிலை இந்த ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு ஏற்படாமல் இருக்க அந்தந்த பள்ளிகளிலேயே வருவாய்த்துறை மூலம் சாதி, இருப்பிடம், குடியுரிமை, சான்றிதழ் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Copying is disabled on this page!